tamilnadu

img

6 ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவருக்கு கைது வாரண்ட்... உ.பி. காவல்துறையின் கேலிக்கூத்து

லக்னோ:
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன ஒருவர், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடினார் என்று வழக்குப் பதிவு செய்து, அவருக்கு கைது வாரண்ட்டும் பெற்றுள்ளசம்பவம் பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒருபகுதி யாக, உத்தரப்பிரதேச மாநிலம் பெரோஸாபாத்திலும் கடந்த டிசம்பர் 20-ஆம்தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீது வன்முறையை பிரயோகித்த உத்தரப்பிரதேச காவல்துறை, மாறாக, பொதுமக்கள்தான் கலவரம் செய்தார்கள் என்று பெரோஸா பாத்தின் பஜார்வாலி கல்லி பகுதியிலுள்ள அனைவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்தது. மேலும் அவர்களை வீடு வீடாகச் சென்று கைது செய்ததுடன், சிலரது வீடுகளில் கைது வாரண்டையும் ஒட்டி வந்தது.அவ்வாறு கைது வாரண்ட் நோட்டீஸ் ஒட்டப்பட்டவர்களில் பனேகான் என்பவரும் ஒருவராவார். பனேகானைத் தேடி கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி பஜார்வாலி கல்லிக்கு போலீசார் நேரில் சென்றுள்ளனர். வீடு பூட்டியிருந்துள் ளது. மீண்டும் மீண்டும் சென்றபோதும் வீடு பூட்டியே இருந்துள்ளது.

அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்தபோது, 6 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோன பனேகானை இப்போது தேடிவந்தால் எப்படி பார்க்கமுடியும்? என கேட்டு, அவர்கள் போலீசாரின் ‘மூக்கை’ உடைத்துள்ளனர். இதில் அவமானப்பட்ட போலீசார், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே, திரும்பிச் சென்றுள்ளனர்.பனேகானை போலீசார் தேடியது பற்றி அவரது மகன் முகம்மது சர்பராஸ் கான் பேட்டி அளித்துள்ளார். அதில், 6 ஆண்டு களுக்கு முன்பே, எனது தந்தை இறந்துபோய் விட்ட நிலையில், அவர்குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதாக ஐபிசி 107, 116 பிரிவு களில் போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், அது மட்டு மல்லாமல், 6 நாட்களில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்காவிட்டால் தனது தந்தையை சிறையில் தள்ளுவோம் என்று போலீசார் மிரட்டிச் சென்றிருப்பதாகவும் சிரிக்காத குறையாக கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச காவல்துறையின் இந்த கேலிக்கூத்து, பனகானோடு நிற்கவில்லை. வயதாகி, நடமாட முடியாத நிலையில் உள்ள பனேகானின் நண்பர்களுக்கும் அவர்கள் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.அவ்வாறு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களில் பிரபல சமூக சேவகர் பஹாத் மீர் கான் என்பவரும் ஒருவர். இவருக்கு 93 வயதாகிறது. மற்றொரு வர் சூபி அன்சார் உசைன். மசூதியில் இமாமாக இருக்கும் இவருக்கு 90 வயதாகிறது. இவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. ஆனால், இவர்கள் கலவரம் செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.அதாவது, குடியுரிமைச் சட்டப் போராட்டங்களை காரணமாக வைத்து,இஸ்லாமியர்களைப் பழிவாங்க வேண்டும்; வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ள வேண்டும் என்றவெறியே, உத்தரப்பிரதேச பாஜகஅரசை இவ்வாறு- இறந்தவருக்குக்கூட கைது வாரண்ட் பிறப்பிக்கும் அள விற்கு நிதானமிழக்கச் செய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

;